கிராமணி குல தோழர்களே !

தங்களை வலைதள மூலமாக உங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் ஏதாவது ஒரு வகையில் யாருக்காவது உபயோகமாக வாழவேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. அது மட்டுமில்லாமல் நாட்டுக்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்தவர் என் தந்தை ம.பொ.சிவஞானம் அவர்கள். அவர் செய்த தியாகங்களை நாம் மறக்கக் கூடாது. அவர் நம் குலத்தில் பிறந்தது நாம் செய்த பேறாகும்.

உங்களுக்காகவே தொடங்கப்பட்டதுதான் இந்த ‘அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கம்’.
maposi
சென்னை ஆயிரம் விளக்கு எனப்படும் வட்டத்தில் சால்வன் குப்பம் என்னும் பகுதியிலே பிறந்தவர் தான் நம் தலைவரும் என் தந்தையுமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்கள். அன்று சால்வன் குப்பம் என அழைக்கப்பட்டது இன்று சாணான் குப்பம் என வழங்கப்படுகிறது. வறுமையான குடும்பத்தில் பிறந்து 2ஆம் வகுப்போடு தன் கல்வியை முடித்தாலும் அவர் சாதித்தது எத்தனை எத்தனை. ‘புதிய தமிழகத்தின் தந்தை’ என அழைக்கப்பட்டவரல்லவா சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்கள்.

இரண்டாம் வகுப்பே முடித்த என் தந்தையை முதன்முதலில் எழுத்தாளனாக அறிமுகமானது “கிராமணி குலம்” என்னும் பத்திரிக்கையின் வாயிலாகத்தான். இதனை என் தந்தையே அவருடைய வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார் (எனது போராட்டம், பக்கம் 116).

இந்த ‘கிராமணி குலம்’ இதழின் ஆசிரியராக திரு.த.சே.உமாபதி கிராமணி பி.ஏ.எஸ்.டி. அவர்கள் இருந்தார். என் தந்தை ம.பொ.சிவஞானம் அவர்கள் நிர்வாக ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் இருந்தார். ‘கிராமணி குலம்’ தொடங்கிய போது என் தந்தை ம.பொ.சிவஞானம் அவர்கள் “கிராமணி குல மகா ஜனத்தின்” செயலாளராக இருந்தார்.

இவ்விதழில் திரு.ம.பொ.சிவஞானம், திரு.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு. நாரண துரைக்கண்ணன், வித்வான் ம.மாசிலாமணி கிராமணியார், திரு.த.சே.உமாபதி கிராமணியார் ஆகியோர் இவ்விதழில் எழுதியவருள் குறிப்பிடத்தகுந்தவராவர். திரு.வித்வான் ம.மாசிலாமணி, தொண்டை மண்டலச் சான்றோர் தர்ம பரிபாலன மகாசபையின் வரலாற்றினைத் தொடர் கட்டுரையாக “எங்கே” என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். “சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப்பாவலர் சரித்திரம்” என்னும் கட்டுரையும் இவரால் எழுதப்பட்டுள்ளது. இவ்விதழிலுள்ள சிறப்புப்பகுதிகளுள் ஒன்றான ‘விகடப்பகுதி’ என்பதனையும் இவர் எழுதியுள்ளார்.

வித்வான் T.P.மீனாட்சி சுந்தரம் பிள்ளை எம்.ஏ.பி.எல். “சான்றோர்”, “சாதிப்பெயர்” என்னும் கட்டுரைகளை எழுதியுள்ளார். திரு. நாரண துரைக்கண்ணன் தமிழ்த்தாய் தரிசனம், “கிராமணி குலமே! உன் நிலை என்ன?”, “அதோ சுதந்திர தேவியின் கோயில் சிகரம்”, “ஆல்ட்ர்மென் பதவி”, “குதிரைப் பந்தய பித்து” என்னும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவ்விதழின் தோற்றம் வளர்ச்சி பற்றி நிர்வாக ஆசிரியரான என் தந்தையிடம் அன்பர் ஒருவர் அப்போது கலந்துரையாடியதையும், என் தந்தை ம.பொ.சி அவர்கள் கூறியதையும் இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகிறேன்.

கிராமணி சமூகத்தினர் தேசிய போராட்டத்தில் பங்கு பெற வேண்டும். அவர்கள் தேசிய உணர்வுடையவர்களாக விளங்கவேண்டும், அந்த அளவில் அவர்களை பக்குவம் பெறுமாறு செய்யவேண்டும், தங்கள் குலப்பெருமையை அவர்கள் அறிய வேண்டும், தங்கள் குலத்தில் உள்ள கற்றவர்கள் பற்றி அவர்கள் அறிய வேண்டும், கல்லாமை அவர்கள் வளர்ச்சிக்கு தடையாய் அமையக்கூடாது என்றெல்லாம் எண்ணித்தான் “கிராமணி குலம்” இதழ் தொடங்கப்பட்டது என்றார் சிலம்புச்செல்வர்.

சான்றார் சரித்திரம் பற்றி சிலம்புச்செல்வர்:
தமிழகத்தின் மீது விசய நகர பேரரசு ஆதிக்கம் பெறுவதற்கு முன்பு கிராமணியும் ‘மறவர்’ (அரசர்) குலத்தவராகவே இருந்து வந்தனர். விசய நகர பேரரசு ஆந்திர வீரர்களோடு வந்து தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றபோது, உள் நாட்டிலிருந்த மறவர்களை அது ஒடுக்க முயன்றது. அம்மறவர்களிலே பலர் பாண்டிய நாட்டின் உட்பிரதேசங்களிலேயும் பாண்டி நாட்டுக்கு வெளியே கிராமங்களிலேயும் குடி புகுந்தனர். கிராமங்களிலே குடி புகுந்தவர்கள் “கிராமணி” என பெயர் பெற்றனர் என்று சொல்லப்படுகிறது. “கிராமணி” என்பதற்கு “கிராம மணியம்” என்று பொருள் கூறப்படுகிறது.

இது பற்றித் திரு.விசய துரைசாமி கிராமணி என்பவர் மிகுந்த ஆராய்ச்சி செய்துள்ளார். ‘சான்றார் என்னும் சொல்லாராய்ச்சி’, ‘கிராமணி என்னுஞ் சொல்லாராய்ச்சி’ என்னும் நூல்களையும் எழுதியுள்ளார்.

கிராமணி என்போர் சென்னை நகரிலும், இந்நகரை அடுத்துள்ள செங்கற்பட்டு மாவட்டப் பிரதேசங்களிலுமே வாழ்கின்றனர். புதுவை ராஜ்யத்திலேயும் ஏராளமானவர்கள் வாழ்கின்றனர்.

ஐயா சிலம்புச்செல்வர் அவர்கள் நாள்தோறும் அதிகாலையில் எழுந்து விநாயகர் அகவல், கந்தர் அனுபூதி, திருவாசகம், திருப்புகழ், திருஅருட்பா போன்ற பக்திப் பாடல்களை கேட்பது வழக்கம். தொண்டர் ஒருவர் ஐயாவை சந்திக்க சென்ற போது ஐயா அவர்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ‘விஷ்ணு சகஸ்கரநாம பாடலை’ கேட்டுக் கொண்டிருந்தார்.

அதில் நம் குலப்பெயர் “கிராமணி” என்ற சொற்றொடர் ‘வேத முதல்வன்’, ‘உயர் குலத் தலைவன்’ என்ற பொருளில் அமைந்துள்ளதை தொண்டரிடம் சுட்டிக்காட்டி “அக்ரணீர் கிராமணி ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரணஹ” என்ற வாசகத்தின் பொருளை எடுத்து விளக்கினார் நம் தலைவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள்.

இத்தனையும் நான் மேற்கோள் காட்டுவது ஐயா அவர்கள் தன் குலம் கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயரவேண்டும், உயர் பதவிகளை அடைய வேண்டும், சமுதாயத்தில் மற்றவர்கள் முன் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், எல்லைப் போராட்டம், தமிழ் நாடு பெயர் போராட்டம் ஆகியவற்றை நடத்தி தன் வாழ்க்கையை போராட்ட களமாக உருவாக்கிக் கொண்டு தன் வாழ்க்கை சரித்திர நூலுக்கு ‘எனது போராட்டம்’ என பெயரிட்டுள்ளார்.

poster_img

சென்னையை தமிழ்நாட்டோடு இணைத்தவர், திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைத்தவர், குமரி, செங்கோட்டை, நாகர் கோவில் ஆகியவற்றையும் தமிழகத்தோடு இணைத்தவர் சிலம்புச்செல்வர்.

நம் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவும், நம் சமூகத்தின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், ம.பொ.சி அவர்களை முன்னிலைபடுத்தவும், தமிழ் மொழி, தமிழ்நாடு, மற்றும் நம் பாரத நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

‘அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கம்’. இந்த இயக்கத்தை ஆரம்பித்துள்ள சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்களின் இளைய மகளான (ம.பொ.சி மாதவி பாஸ்கர்) எனக்கு பேராதரவு தந்து நம் குலம் தழைக்க பாடுபட வேண்டுமென இந்த வலை தளத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

மேலும் தகவல் »